தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலி
தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி அருகே உள்ள ஆயிக்கவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் மோகன் (வயது 19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மோகன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடி- ஈரோடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
முத்துக்கவுண்டன்பிரிவில் சென்றபோது தனியார் பஸ் ஒன்று ரோட்டின் ஓரமாக நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. இதனால் மோகன் அந்த பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் ஒன்று மோகனின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட மோகன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த மோகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story