நாட்டின் வளர்ச்சிக்கு எதிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் வி.ஐ.டி.யில் நடந்த பொருளாதார சங்க மாநாட்டில் கவர்னர் பேச்சு
நாட்டின் வளர்ச்சிக்கு எதிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வி.ஐ.டி.யில் நடந்த இந்திய பொருளாதார சங்க மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
வேலூர்,
இந்திய பொருளாதார சங்கத்தின் 101–வது தேசிய மாநாடு வி.ஐ.டி.யில் நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நேற்று காலை நடந்தது. மாநாட்டிற்கு இந்திய பொருளாதார சங்கத்தின் மாநாட்டு தலைவரும், வி.ஐ.டி.வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் வரவேற்றார்.
இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கிவைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
முதல் மற்றும் 2–ம் நூற்றாண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்தநாடாக விளங்கியது. காரணம் அப்போது பலநாடுகளுடன் வர்த்தகம் நடந்தது. ஆங்கிலேயர்கள் வந்தபிறகு அவர்கள் நாட்டின் உற்பத்தியை இந்தியாவில் சந்தைப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் தொழில்வளர்ச்சி முடங்கியது. மேலும் அப்போது பணப்பரிமாற்றத்திற்கு பதில் பண்டபரிமாற்றங்களே இருந்தன. இதனால் அவை கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை.
நாட்டின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொருளாதார நிபுணர்கள் ஆலோசிக்கவேண்டும். கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களையும் சந்தித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்யவேண்டும். நாட்டில் உள்ள நிலப்பரப்பு அனைத்தும் கட்டிடங்களாக மாறி விவசாய நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்துவிட்டதாக சொன்னார்கள். நிலப்பரப்பு குறையாமல் இருக்க கட்டிடங்களை அடுக்குமாடி கட்டிடங்களாக கட்டவேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிலுமே வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். அதேபோன்று நேர மேலாண்மையை கடைபிடிக்கவேண்டும். சுதந்திரம் அடைந்ததும் 2 தலைமுறைகள் நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண்மை புரட்சி ஏற்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களும் வளர்ச்சியடைந்தன.
உலகில் தாராளமயமாக்கல் கொள்கை வந்ததும் இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. பிரதமர் கொண்டுவந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டம் முழு வெற்றியைகண்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் மாநாட்டில் வாழ்க்கை தரம் உயர்வு, பொருளாதார கொள்கையில் மாற்றம், வேளாண்மை வளர்ச்சி, வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொருளாதார நிபுணர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
முன்னதாக ஜி.விசுவநாதன் பேசியதாவது:–
ஒருநாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம்தான் முக்கியகாரணம். மக்களின் வளர்ச்சியை கண்காணிப்பவர்கள் பொருளாதார நிபுணர்கள்தான். இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 18 சதவீதமாகும். ஆனால் நிலப்பரப்பு 2½ சதவீதமும், தண்ணீர் 4 சதவீதமும்தான் உள்ளது. இதனால் இந்தியாவில் நிலப்பரப்பும், தண்ணீரும் பற்றாக்குறையாக உள்ளது.
குடியிருப்புகள் அதிகரித்து, விவசாய நிலங்களும், தண்ணீரும் குறைந்துவருகிறது. இதற்கு நாம் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தவேண்டும். கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்கொடுக்கும் நாடுகளே வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் கல்விக்கு 9 சதவீதம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் 4 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறார்கள். அதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை உள்ளது.
இந்தியாவில் 22 சதவீதம் மக்கள் வறுமைகோட்டுக்குக்கீழ் உள்ளனர். 75 சதவீதம்பேர் உயர்கல்விபெற முடியவில்லை. கல்வியில் உலக அளவில் 180 நாடுகளில் இந்தியா 130–வது இடத்தில் உள்ளது. இப்போதுதான் பொருளாதாரத்தில் வளர்ந்துவருகிறோம். நம்மைவிட அதிக மக்கள்தொகையை கொண்ட சீனாவில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. எனவே இந்தியாவில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க பொருளாதார நிபுணர்கள் ஆய்வுசெய்யவேண்டும்.
கருப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றால் இந்திய பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது. பிரதமரின் பணமதிப்பிழப்பு, கருப்பு பணத்தை ஒழிப்பதில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ரூ.1000 கோடி செலவு செய்கின்றன. சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதுபற்றி பொருளாதார நிபுணர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய பொருளாதார சங்கத்தை சேர்ந்த மகேந்திரதேவ் கலந்துகொண்டு பேசினார். முடிவில் பொதுச்செயலாளர் அனில்குமார் தாக்கூர் நன்றி கூறினார். இதில் பல்வேறு பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வி.ஐ.டி. சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின் வணிகவியல் துறை செய்துள்ளது.