டாஸ்மாக் ஊழியர், போலீஸ்காரரை வெட்டி ரூ.2 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது


டாஸ்மாக் ஊழியர், போலீஸ்காரரை வெட்டி ரூ.2 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2018 10:15 PM GMT (Updated: 27 Dec 2018 6:28 PM GMT)

மயிலம் அருகே டாஸ்மாக் ஊழியர், போலீஸ்காரரை வெட்டி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம், 

மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி தலைமையிலான போலீசார் கொல்லியங்குணம் மயிலம்-கூட்டேரிப்பட்டு சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வடநெற்குணம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ் என்ற மோகன்தாஸ் (வயது 20), கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்குப்பத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் சபரிநாதன்(20), காஞ்சீபுரம் மாவட்டம் மடையம்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் மகன் அப்பு என்ற சர்ஜன்(28), திண்டிவனம் கண்ணகிநகரை சேர்ந்த சர்புதீன் மகன் முகமதுஆசிக்(22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி இரவு மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு விற்பனையான தொகை ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஊழியர் திருவேங்கடம் என்பவர், போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு எடுத்து சென்றபோது, அவரையும், பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரரையும் தாக்கி அரிவாளால் வெட்டி அவர்கள் 4 பேரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததும், அந்த பணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கியதும் தெரிந்தது. மேலும் இவர்கள் செஞ்சி அருகே நேமூர் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான தினேஷ் திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் ஊழியர், போலீஸ்காரரை வெட்டி பணத்தை கொள்ளையடித்த 4 பேரை கைது செய்த மயிலம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story