வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை; கண்டக்டர் உள்பட 3 பேர் கைது - 13 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீசார்


வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை; கண்டக்டர் உள்பட 3 பேர் கைது - 13 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 28 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மினிபஸ் கண்டக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரத்தில் தோட்ட வீட்டில் வசித்து வருபவர் வேலுத்தேவர் (வயது 70). விவசாயி. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வேலுத்தேவர் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பிடுங்கினர். பின்னர் பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம் சாலையில் நடந்து சென்ற முத்துக்குமார் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.1,250 மற்றும் கெடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுதொடர்பாக முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் தேனி சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வருசநாடு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஜீப்பில் மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு கிராமத்தை கடந்து 13 கி.மீ. விரட்டி சென்று பாலூத்து விலக்கு அருகே மோட்டார் சைக்கிளை மடக்கி 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த சந்திரன்(வயது 45), ஜீவன் (28) என்பதும், வேலுத்தேவர் வீட்டில் கொள்ளையடித்ததும், முத்துக்குமாரிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேலுத்தேவர் வீட்டில் கொள்ளையடித்ததில் தொடர்புடைய குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த போதராஜாவும்(48) கைது செய்யப்பட்டார்.

இதில் ஜீவன் மினிபஸ் கண்டக்டராகவும், மற்ற 2 பேரும் கேரளாவில் கூலி வேலையும் செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீதும் கூடலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story