அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபர் கைது


அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2018 10:30 PM GMT (Updated: 28 Dec 2018 4:52 PM GMT)

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் சாதிக். இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு தேன்கனிக்கோட்டை சந்தை மைதானத்தில் 3 நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அல்லாபகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சபிக், சமியுல்லா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதில் சபிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சமியுல்லா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். கொலை நடந்து 8 ஆண்டுகள் ஆகியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா பழைய கொலை வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பழைய குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சமியுல்லாவை (வயது 29) நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனிப்படையினர் கைது செய்தனர்.

Next Story