திருமுல்லைவாயலில் 10-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து


திருமுல்லைவாயலில் 10-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில் 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அயப்பாக்கம் தேவி நகரைச் சேர்ந்தவர் வேணு. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஜெகதா. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு சரவணன் மற்றும் பாபு (வயது 15) என 2 மகன்கள் உள்ளனர்.

பாபு, அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பாபு, தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று சிலருடன் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர்கள், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாபுவை சரமாரியாக குத்தினர். இதில் பாபுவுக்கு வயிறு, மார்பு உள்பட 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

வலியால் அலறித்துடித்த பாபு, மாடி படியில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பாபுவின் தந்தை வேணு மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மாடியில் இருந்து பின்பக்கமாக கீழே குதித்து, அருகில் உள்ள முட்புதருக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த பாபுவை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கத்தியால் குத்தியவர்கள் யார்?, எதற்காக அவரை கொலை செய்ய முயன்றனர்?. என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story