உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் மண்ணை சாப்பிடும் போராட்டம்


உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் மண்ணை சாப்பிடும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 28 Dec 2018 11:31 PM IST)
t-max-icont-min-icon

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாழப்பாடியில் விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி, 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாயிகள் நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். தொடர்ந்து விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

வாழப்பாடியில் ஏற்கனவே விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்காக உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வழியில்லாமல் போனால் அடுத்த தலைமுறை மண்ணைதான் சாப்பிட வேண்டி இருக்கும். இதை வலியுறுத்தி மண்ணை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பந்தலில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு மண்ணை ஊட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story