புதுச்சத்திரத்தில் பெட்ரோல் ‘பங்க்’ ஊழியரை வெட்டி பணப்பையை பறித்த மேலும் ஒருவர் கைது


புதுச்சத்திரத்தில் பெட்ரோல் ‘பங்க்’ ஊழியரை வெட்டி பணப்பையை பறித்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரத்தில் பெட்ரோல் ‘பங்க்’ ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பையை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 30). இவர் சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ந்தேதி இவர் பணியில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென சிவசங்கரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த பணப்பையை பறித்து விட்டு அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சிவசங்கர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சின்னூர் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை மட்டும் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த நாவல்குளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் என்கிற குரு(24), புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன் தேவா(23) என்பதும், தப்பி ஓடியவர் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(27) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர் சிவசங்கரையும், வயலூர்-வண்டிகேட் மெயின்ரோட்டில் நின்றிருந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சங்கர் என்பவரையும் அரிவாளால் வெட்டி பணம் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து குரு, தேவா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேசை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்வகணபதி நகரில் சந்தேகப்படும்படியாக கையில் காயக்கட்டுடன் நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம் பகுதியை சுரேஷ் என்பதும், பெட்ரோல் ‘பங்க்’ ஊழியரை வெட்டி பணப்பை பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 27-ந்தேதி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் விழுந்து கை முறிவு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 அரிவாள்கள், ரூ.6 ஆயிரத்து 100 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story