83 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் மதுரையில் கைது - மேலும் 4 பேர் சிக்கினர்; 158 பவுன் நகை மீட்பு
83 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 158 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை,
மதுரையில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபடுவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி மேற்பார்வையில் உதவி கமிஷனர் மோகன் தம்பிராஜன், இன்ஸ்பெக்டர் முருகதாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் பழங்காநத்தம் பாலத்தின் கீழே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு கும்பலை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் மதுரை சிக்கந்தர்சாவடி பொதும்புவை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் (வயது 42), தனக்கன்குளம் பர்மா காலனியை சேர்ந்த ஒத்தக்கண் பாண்டியராஜன் (38), ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் லட்சுமணன்(38), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாபு ஆறுமுகம்(42) என்பதும், அவர்கள் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் ரவி என்ற ரவிச்சந்திரன் மீது 9 மாவட்டங்களில் 83 நகை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது.
தாங்கள் கொள்ளையடித்த நகைகளை மதுரை தெற்கு ஆவணி மூலவீதியை சேர்ந்த சந்தீப் (29), மகாதேவ், பீமாராவ் ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று சந்தீப்பை பிடித்து விசாரித்தனர். அதை தொடர்ந்து போலீசார் ரவிச்சந்திரன், ஒத்தக்கண் பாண்டியராஜன், லட்சுமணன், பாபுஆறுமுகம் மற்றும் சந்தீப்பை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 வழக்குகளில் தொடர்புடைய 158 பவுன் தங்க நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள், 8 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு நகைகளை வாங்கி விற்றது தொடர்பாக மகாதேவ், பீமாராவ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரையில் கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
Related Tags :
Next Story