மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்


மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

கோவை, 

ஈரோட்டை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 40). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கியிருந்து தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் தலை சுற்றல் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னம்பலம் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் தலைமையிலான குழுவினர் பொன்னம்பலத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருடைய உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பொன்னம்பலம் மூளைச்சாவு அடைந்தார். அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதனை தொடர்ந்து பொன்னம்பலத்தின் ஒரு சிறுநீரகம் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. இதயம் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அந்த இதயம் கோவையில் இருந்து விமானம் மூலம் ஒரு மணிநேரத்திற்குள் கொண்டுசெல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

உடல் உறுப்புகளை தானம் செய்த பொன்னம்பலத்தின் குடும்பத்தினருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் பாராட்டியது. உலகிலேயே 8 மணி நேரத்திற்குள் அதிக அளவிளான உடல் உறுப்புகளை கொடையாளிகளை பதிவு செய்து ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story