திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.342½ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில் முதலீட்டாளர் கருத்தரங்கில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.342½ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில் முதலீட்டாளர் கருத்தரங்கில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 7:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.342½ கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தொழில் முதலீட்டாளர் கருத்தரங்கில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் வணிகத்துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு–2019–ஐ முன்னிட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி சேவல் வெ.ஏழுமலை எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ‘வி‌ஷன்–2023’ என்ற இலக்கை நோக்கி திட்டங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் பல்வேறு செயல் உத்திகளை வகுத்து நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், தமிழ்நாடு இன்று இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தொழில்துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்திடும் விதமாக தமிழக அரசு சார்பில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் 2–வது மாநாடு நடக்கிறது. முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட முன்னோடி திட்டமான நீட்ஸ் திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் உச்சவரம்பு, தற்போது ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச மானியத்தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. தொழில்கள் தொடங்குவதற்கான, பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கான நடைமுறைகளை மேலும் எளிதாக்கிடவும், விரைவுப்படுத்திடவும் ஏதுவாக அரசால் ‘தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம், விதிகள்’ உருவாக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 961 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 63 லட்சமும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 258 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 50 லட்சமும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 68 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியும் 34 லட்சமும் தமிழக அரசால் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி, சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மினரல் சார்ந்த தொழில்கள், கிரில்கேட் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிட்கோ நிறுவனத்தால் பெரியகோலாப்பாடி, கண்ணக்குறுக்கை கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதால் அதிகளவில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் ரூ.520 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரையில் 311 தொழில் முதலீட்டாளர்களுடன் ரூ.342 கோடியே 54 லட்சத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து புதிய முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான ஆணையை அவர் வழங்கினார்.

கூட்டத்தில் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சிறுதொழில் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story