கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு


கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Dec 2018 5:00 AM IST (Updated: 29 Dec 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

கொத்தவால்சாவடியில் 4 வயது சிறுமி மாயமானாள். போலீஸ் விசாரணையில் அவளை மர்மபெண் கடத்திச்சென்றது தெரிந்தது.

பிராட்வே,

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார், மர்மபெண்ணை தேடி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 29). இவருடைய மனைவி செல்வி(26). இவர்களுக்கு ஒரு மகனும், விஜயலட்சுமி(4) என்ற மகளும் உள்ளனர்.

செல்வி தனது மகள் விஜயலட்சுமியை கொத்தவால்சாவடி ஆதியப்பன் நாயக்கன் தெருவில் உள்ள தனது தாய் கன்னியம்மாள் வீட்டில் விட்டு இருந்தார். கடந்த 27-ந்தேதி இரவு அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி விஜயலட்சுமி திடீரென மாயமானாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வியின் தாய், அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தார். எங்கேயும் சிறுமியை காணவில்லை. இதையடுத்து சிறுமி மாயமானதாக கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அடையாளம் தெரியாத மர்மபெண் ஒருவர் சிறுமியை கடத்திச்சென்றது தெரிந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மபெண்ணின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆராய்ந்தனர்.

அதில், அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி விஜயலட்சுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே சிறுமி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து, கடத்தப்பட்ட சிறுமியையும், அவளை கடத்திய பெண்ணையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட சிறுமி விஜயலட்சுமி, நேற்று காலை தி.நகரில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் சிறுமியை கடத்திச்சென்ற பெண், சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நடைபாதையோரம் வசித்து வருபவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இருந்த ரெயில்வே போலீசார், அந்த பெண்ணிடம் இருந்து சிறுமியை மீட்டு தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சிறுமியை கடத்திச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கொத்தவால்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story