போக்குவரத்து விதிகளை மீறிய 11,966 பேருக்கு ரூ.53½ லட்சம் அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 11,966 பேருக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.53½ லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், காணை, கோலியனூர், வளவனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை செய்தனர்.
இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம், ‘சீட் பெல்ட்’ அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இயங்குதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக 11 ஆயிரத்து 966 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.53 லட்சத்து 47 ஆயிரத்து 995 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக நபர்களை ஏற்றிச்சென்ற 135 வாகனங்களும், அதிக பாரத்தை ஏற்றிச்சென்ற 307 வாகனங்களும், பர்மிட் இல்லாமல் ஓடிய 32 வாகனங்களும், எப்.சி. இல்லாமல் ஓடிய 99 வாகனங்களும் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர இன்சூரன்ஸ் செலுத்தாத வாகன ஓட்டிகள் 501 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் 669 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விபத்துகள் நடைபெறும் முக்கிய இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் பேரிகார்டுகள் அமைத்தல், சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார்களில் ‘ஷீட்பெல்ட்’ அணியாமல் செல்கின்றனரா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒளிரும் மின்விளக்குகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது.
இந்த தகவலை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story