மினி மாரத்தான் போட்டி: கென்யா வீரர் சாம்பியன் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்
கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கென்யா நாட்டை சேர்ந்த வீரர் முதல் பரிசை பெற்றார். அவருக்கு ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் தூய்மை, பசுமையான கன்னியாகுமரி என்பதை வலியுறுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை 21 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்டு நடந்தது.
போட்டியை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், சென்னை முன்னாள் மேயர் சுப்பிரமணியன், சப்-கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோரும் வீரர்களுடன் ஓடி வந்தனர்.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் கடற்கரை சாலை, மணக்குடி, கோட்டார் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர். ஆண்கள் பிரிவில் கென்யா நாட்டை சேர்ந்த ஐசக்நட்டோ முதல் பரிசையும், பஞ்சாப்பை சேர்ந்த சுப்தேவ் 2-ம் பரிசையும், மார்ட்டின் நெடுங்கு நாகங்கா 3-வது பரிசையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவை சேர்ந்த பிருந்துகான் முதல் பரிசையும், செனாசி 2-வது பரிசையும், கோவையை சேர்ந்த சோனியா 3-வது பரிசையும் தட்டிச் சென்றனர்.
இதுபோல், 10 கிலோ மீட்டர் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பார்வதிபுரம், செட்டிகுளம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதில் ஆண்கள் பிரிவில் பெங்களூருவை சேர்ந்த சத்தியேந்திரகுமார் பட்டேல் முதல் பரிசையும், கோவையை சேர்ந்த சசிகுமார் 2-வது பரிசையும், மணிகண்டன் 3-வது பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் கீதா முதல் பரிசையும், கேரளாவை சேர்ந்த சுருதிமிஸ் 2-வது பரிசையும், ஏஞ்சல்ஜேம்ஸ் 3-வது பரிசையும் பெற்றனர்.
மேலும், 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியும் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட மினி மாரத்தான் போட்டி செயலாளர் டாக்டர்.தேவபிரசாத் ஜெயசேகரன், தடகள சங்க தலைவர் பிரவீன் மேத்யூ, செயலாளர் காட்வின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story