மாவட்ட செய்திகள்

தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண் + "||" + Into the home of the friend The robbers A girl who went off with Ariva

தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண்

தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று விரட்டிய பெண்
தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று பெண் ஒருவர் விரட்டினார். இதில் ஸ்கூட்டரை விட்டுவிட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர், 

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச பிரபு (வயது 39). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி கவிதா (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

இவர்கள் இருவரும் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்தவுடன் சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் சென்று விட்டனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு சீனிவாச பிரபு வீட்டுக்கு ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அவர்கள் பூட்டி இருந்த வீட்டின் முன்பு நின்று உள்ளே செல்ல நோட்டமிட்டனர். இந்த பகுதி அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்லும் பகுதி என்பதால், காட்டு யானைகள் வந்தால் நாய்கள் குரைக்கும்.

அதிகாலை 2 மணிக்கு நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தன. இதனால் கவிதாவின் தோழியான பக்கத்து வீட்டை சேர்ந்த கயல்விழி (42) என்ற பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் காட்டு யானைகள்தான் வந்துவிட்டது என்று நினைத்து, தனது வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை கண்காணித்தார்.

அப்போது சீனிவாசபிரபு வீட்டின் கதவை உடைத்து 2 பேர் உள்ளே செல்வது தெரிந்தது. அப்போதுதான் கயல்விழிக்கு வீட்டில் யாரும் இல்லாதது தெரியவந்தது. உடனே அவர் கவிதாவுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே உஷாரான கயல்விழி சிறிதும் தாமதிக்காமல் தூங்கிக்கொண்டு இருந்த தனது கணவரை எழுப்பி, தகவல் தெரிவித்தார்.

பின்னர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு திருடன், திருடன் என்று கத்தியபடி சீனிவாச பிரபு வீட்டின் முன்பு சென்றார். வீட்டின் வெளியே அரிவாளுடன் ஒரு பெண் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள், வீட்டைவிட்டு வெளியே வந்து ஓடினார்கள். எனினும் அவர்கள் இருவரையும் அந்த பெண் துணிச்சலுடன் துரத்தினார்.

இதனால் மர்ம ஆசாமிகள் தாங்கள் வந்த ஸ்கூட்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது கயல்விழியின் கணவர் மற்றும் அவருடைய நண்பர் ஹரீஷ் (34) ஆகியோரும் சேர்ந்து மர்ம ஆசாமிகளை விரட்டினார்கள்.

இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கு உள்ள சோளக்காட்டிற்குள் புகுந்து தப்பி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் சீனிவாசபிரபு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. அத்துடன் மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற ஸ்கூட்டரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ஏராளமான நகைகள் இருந்தன. அந்த நகைகள் எங்கு திருடப்பட்டது என்பது தெரியவில்லை.

உடனே போலீசார் அந்த நகைகளையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்ததுடன், அங்கு பொருத்தப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் மர்ம ஆசாமிகளின் முகம் சரியாக தெரியவில்லை.

எனினும் மர்ம ஆசாமிகள் பகல் நேரத்தில் பூட்டிக்கிடந்த அந்த வீட்டை நோட்டமிட வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை சீனிவாசபிரபு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை அரிவாளுடன் ஒரு பெண் விரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது துணிச்சலை அந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.


ஆசிரியரின் தேர்வுகள்...