தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள் இலைபறிக்கும் பணி பாதிப்பு


தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள் இலைபறிக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலைத் தோட்ட பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் மற்றும் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதிக்கும் இடைப்பட்ட தேயிலைத் தோட்ட பகுதியில் நேற்று அதிகாலை முதல் குட்டிகள் உள்பட 9 காட்டுயானைகள் கொண்்ட கூட்டம் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டம் கடந்த ஒரு வாரமாகவே நடுமலை, பச்சைமலை, காஞ்சமலை, சிறுகுன்றா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். தற்போது வால்பாறை பகுதியில் பனிப்பொழிவும், கடுமையான வெப்பமும் நிலவி வருவதால் காட்டுயானைகள் கூட்டம் நீராதாரமுள்ள இந்த எஸ்டேட் பகுதிகளிலேயே சுற்றித்திரிகின்றன.

தற்போது யானைகள் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதிக்கும்,சோலையார் எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு நின்று வருகின்றன. இதனால் நேற்று காலையில் சோலையார் எஸ்டேட் பகுதி மற்றும் சிறுகுன்றா எஸ்டேட் மேல்பிரிவு பகுதி தொழிலாளர்களும் தேயிலை இலை பறிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

பின்னர் எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்களை பாதுகாப்பாக வேறு தேயிலைத் தோட்டத்திற்கு பணிக்கு அனுப்பிவைத்தனர். உடனே எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் மாதம் வரை காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் எஸ்டேட் நிர்வாகத்தினர் எஸ்டேட் பகுதிகளுக்குள் வரும் காட்டுயானைகள் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்றும், கட்டாயப்படுத்தி துரத்த வேண்டாம் என்றும், அதிகாலை நேரங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது கவனமாக செல்லவேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story