சமூகநலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம்
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
விழாவிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), மருதராஜா எம்.பி. (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் சாந்தா, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் 10-வது மற்றும் 12-ம் வகுப்பு படித்த 161 பயனாளிகளுக்கு திருமண நிதிஉதவியான தலா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் மற்றும் பட்டம், பட்டயப்படிப்பு படித்த 339 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கினர்.
கடந்த 26-ந் தேதி முதற்கட்டமாக 500 பயனாளிகளுக்கு திருமணநிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. நேற்று 2-வது கட்டமாக மொத்தம் 500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 14 ஆயிரத்து 200 மதிப்பிலான திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் காப்போம்- பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற வாசகம் குறித்த காலண்டர் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி (பொறுப்பு) பூங்கொடி வரவேற்றார். முடிவில் வேப்பந்தட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story