விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்,
விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலையோரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 14-வது நாளாகவும், 8-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டதிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் எஸ்.சேகர், அவைத்தலைவர் நடனசபாபதி, பொருளாளர் குமார், குமாரபாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, தங்கவேல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் வருகிற 3-ந் தேதி கோட்டையை முற்றுகையிட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story