நாளை புத்தாண்டு கொண்டாட்டம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்


நாளை புத்தாண்டு கொண்டாட்டம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 31 Dec 2018 4:00 AM IST (Updated: 31 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

நாளை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.இதையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

நாளை (செவ்வாய்க் கிழமை) புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நேற்று முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

அதிகாலையில் இருந்தே கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் பலர் அறைகள் கிடைக்காததால் தங்கள் வாகனங்களிலேயே தங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக பகல் நேரத்திலேயே கடுமையான குளிர் நிலவி வருவதால் அனைவரும் பாதுகாப்பான உடை அணிந்து நடமாடுகின்றனர். இதனிடையே அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிறங்கியவாறு சென்று சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைத்தது.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களைகட்டின. குறிப்பாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது.

மேலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானல் நகர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே புத்தாண்டை கொண்டாட மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அதனை கண்காணிக்க மலைப்பாதை முழுவதிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். அத்துடன் தரைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை தடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கொடைக்கானல் தயாராகி வருவதால் கொடைக்கானல் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கிறிஸ்தவ ஆலயங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. அதுமட்டுமின்றி அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story