புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2018 4:30 AM IST (Updated: 31 Dec 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன் கூறினார்.

புதுச்சேரி,

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. புதுவை கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருபவர்கள் தங்களது கார்கள், மோட்டார்சைக்கிள்களை உப்பளம் துறைமுகம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானம், பெத்திசெமினார் பள்ளியில் நிறுத்த வேண்டும். ஒயிட் டவுன் பகுதிகளில் வாகனங்கள் எதுவும் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் அனுமதிக்கப்படாது.

வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து கடற்கரை, நேரு வீதி, பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து ஆம்பூர் சாலை வழியாக சர்தார் வல்லபாய்பட்டேல் சாலை வழியாக இலவச பஸ்கள் இயக்கப்படும். அந்த பஸ்கள் மீண்டும் ஆம்பூர் சாலை வழியாக வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து சேரும். இவ்வாறு பொதுமக்களின் வசதிக்காக 10 பஸ்கள் இயக்கப்படும்.

புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நேரத்தில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக நடந்துகொள்ளக்கூடாது. மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள். அதே நேரத்தில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரகளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 700 போலீசார், 150 என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் பணியில் இருப்பார்கள். போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து ரோந்து வந்துகொண்டே இருப்பார்கள். முக்கிய சாலை சந்திப்புகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த முறை கூகுள் மேப் உதவியுடன் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களது உதவிக்கு என ஆங்காங்கே 9 ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். 5 பறக்கும் கேமராக்கள் மூலமும் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட புதுவை கடற்கரை, சின்னவீராம்பட்டினம், பாரடைஸ் பீச் உள்ளிட்டங்களில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறந்ததும் சிறிய அளவில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம். அதுவே விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. நள்ளிரவு 1 மணிவரை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடலாம். அதற்கு மேலும் நேரம் தேவைப்படாது என்று நினைக்கிறோம்.

இவ்வாறு டி.ஐ.ஜி. சந்திரன் கூறினார்.


Next Story