நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது - சிவா எம்.எல்.ஏ. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது - சிவா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2018 5:00 AM IST (Updated: 31 Dec 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளதாக சிவா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வு கூட்டம் மூலக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

இதில் அவைத்தலைவர்கள் சீத்தா.வேதநாயகம், பலராமன், மாநில துணை அமைப்பாளர்கள் குணாதிலீபன், அமுதாகுமார், மாநில பொருளாளர் சண்.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவருமான சபாபதி மோகன் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேசினார்.

கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:–

நாடாளுமன்றம், மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார். இதனை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழகம், புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி வைத்துள்ளோம். புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் கட்சியின் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மக்களுக்கு எதிராக அரசு செயல்பட்ட போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளோம். இதுவரை 19 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளோம்.

புதுச்சேரியில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கட்சி தலைமை வேட்பாளராக அறிவிக்கும் நபரை வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளும் நமதே என்பது குறிக்கோளை அடைய வேண்டும். மத்தியில் ஆளும் மக்கள் விரோத ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக உழவர்கரை தொகுதி செயலாளர் கலியகார்த்திகேயன் வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜீம், முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story