பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மணப்பாறையில் வரவேற்பு


பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மணப்பாறையில் வரவேற்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 11:00 PM GMT (Updated: 30 Dec 2018 10:46 PM GMT)

பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை வந்த அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மணப்பாறை,

பனை மரங்களை பாதுகாத்து இயற்கையோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி 45 இளைஞர்கள் சென்னையில் இருந்து மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகம் நோக்கி இயற்கை குறித்த நேசிப்பையும், இயற்கைக்கு மாறானவைகளை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மணப்பாறை வந்த அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டது.

இளைஞர்கள் ஓட்டி வந்த சைக்கிள்களில் காசு கொடுத்து குடிநீர் வாங்கினால் காக்கா, குருவிகள் எங்கே போகும், பனை மரங்கள் எங்கள் அடையாளம், காற்றும், மலையும், நீரும் நஞ்சாகியது போதும், நீர்நிலைகளை பாதுகாப்போம், நஞ்சில்லா விவசாயத்தை முன்னெடுப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் சைக்கிள்களின் முன் பகுதிகளில் வைத்திருந்தனர்.

பின்னர், இதே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். தொடர்ந்து முள்ளிப்பாடியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை விவசாயம் செய்வது எப்படி?, பனை மரத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை ஏன் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு கொடுப்பதற்காக பிஸ்கட் மற்றும் டீ ஆகியவை வாங்கி வரப்பட்டது. அவற்றை பிளாஸ்டிக் பையில் வாங்கி வந்திருப்பதை பார்த்த இளைஞர்கள், தங்களின் நோக்கமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பற்காகத் தான் என்று கூறி அதனை தவிர்த்தனர். பின்னர் அவர்கள், வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து விட்டு தங்களது பயணத்தை தொடர்ந்தனர். 

Next Story