தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் பிளவு புதிய அமைப்பு திருச்சியில் உதயம்


தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் பிளவு புதிய அமைப்பு திருச்சியில் உதயம்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:15 PM GMT (Updated: 30 Dec 2018 10:48 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு திருச்சியில் புதிய சங்கம் உருவாகி உள்ளது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கு.பாலசுப்பிரமணியம் என்பவரை சிறப்பு தலைவராக கொண்டு இயங்கி வருகிறது. சிறப்பு தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இந்த சங்கத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

இந்த சங்கத்தில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் திருச்சியில் ஒன்று கூடி நேற்று தமிழ் மாநில அரசுப்பணியாளர் சங்கம் என்ற புதிய சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இந்த சங்கத்தின் மாநில அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.

இதில் சங்கத்தின் புதிய தலைவராக கணேசன் (புதுக்கோட்டை), பொதுச்செயலாளராக பழனி (விழுப்புரம்), பொருளாளராக மணிராஜ் (புதுக்கோட்டை), துணைத்தலைவர்களாக செல்வராஜ் (ராமநாதபுரம்), சின்னப்பா (திருச்சி), முத்துராக்கு (சிவகங்கை), மருததுரை (திருவாரூர்) ஆகியோரும் மற்றும் அமைப்பு செயலாளர், மாநில செயலாளர், பிரசார செயலாளர் ஆகிய மாநில நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (என்.ஜி.ஓ.) மாநில தலைவர் ரா.சண்முகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த மாநாட்டில், அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவை தொகையை வழங்கவேண்டும், மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் மாதாந்திர மருத்துவப்படி ரூ.1000 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வருவாய்த்துறை, சத்துணவு, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை, காவல் துறை அமைச்சு பணி உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Next Story