மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்; கவர்னர் கிரண்பெடி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி குந்தகம் விளைவிக்கிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து கேட்டு சிறப்பு கருத்தரங்கம் கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் கலந்துகொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
யூனியன் பிரதேசங்களான டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் வித்தியாசம் உண்டு. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. புதுவை அரசுக்கு நிலம், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நிதி என அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் டெல்லிக்கு கிடையாது. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் நம்முடைய உரிமைகளை வலியுறுத்தவில்லை.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போட்ட வழக்கில் கவர்னருக்கு (துணைநிலை ஆளுநர்) தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும், அரசு எடுக்கும் முடிவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டி, நிர்வாகத்தில் தினந்தோறும் தலையிட்டு மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். டெல்லிக்கு கொடுத்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்கள் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரம் வேண்டும். நம்முடைய மாநிலத்துக்கு ஆபத்து வரும்போது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் அதை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதற்கு ரூ.5 கோடிதான் செலவாகும். பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பொய்கூறும் விருது கிரண்பெடிக்கு கொடுக்கவேண்டும். மோடி மைக்கில் பொய் கூறுவார். ஆனால் கிரண்பெடி சமூக வலைதளங்களில் பொய் கூறுகிறார். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.
ஜனநாயகத்தை மதிக்காத கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமராக மோடி இருக்கும்வரை இங்கு கிரண்பெடி இருப்பார். அதுவரை எங்கும் போகமாட்டார்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:–
கவர்னர் பதவியே தேவையில்லை என்பது எங்கள் கட்சியின் கருத்து. இதை முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏற்கமாட்டார். ஏனெனில் அது அவருடைய கட்சியின் நிலை. யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் பேசுவார்கள் என்று யாரோ கூறியதாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கவர்னர் என்பவர் யார்? மக்கள் ஆதரவு பெற்றவரா? மக்களால் அங்கீகரிக்கப்பட்டவரா? டெல்லியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போன அவரை புதுவை கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதுபோல் மக்கள் செல்வாக்கை இழந்தவர்களைத்தான் மத்திய அரசு கவர்னராக நியமிக்கிறது.
மாநில சட்டமன்றங்களை மதிக்கக்கூடிய அரசாங்கம் மத்தியில் இல்லை. தற்போது தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இரட்டை ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து போராட துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது. ஆனால் புதுவையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு அதனை எதிர்த்து போராடுகிறது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த புத்தாண்டு பிரதமர் மோடிக்கு விடை கொடுக்கிற ஆண்டாக பிறக்கிறது. கவர்னர் கிரண்பெடி வருகிற மே மாதம்வரை இங்கு இருப்பார். அதன்பிறகு பதவியில் இருக்கமாட்டார்.
இவ்வாறு முத்தரசன் பேசினார்.
கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.