இரட்டை ரெயில் பாதையால் குடியிருப்புகள் அகற்றப்படுகிறது: பறக்கின்கால் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்


இரட்டை ரெயில் பாதையால் குடியிருப்புகள் அகற்றப்படுகிறது: பறக்கின்கால் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2018 8:12 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை ரெயில் பாதையால் குடியிருப்புகள் அகற்றப்படுவதாகவும், இதனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பறக்கின்கால் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த வகையில் மொத்தம் 238 மனுக்களை வருவாய் அதிகாரி ரேவதி பெற்று கொண்டார்.

அப்போது நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “நாங்கள் பறக்கின்கால் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் இரட்டை ரெயில்பாதை அமைப்பதற்காக எங்களது குடியிருப்பை 6 மாதத்துக்குள் காலி செய்யும்படி ரெயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக 4 முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே எங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல அ.தி.மு.க. அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “பள்ளம் அன்னை நகரை சேர்ந்த சகாயம் (46) என்பவர் கடந்த 25–ந் தேதி கடலில் மூழ்கினார். பின்னர் மறுநாள் பிணமாக மீட்கப்பட்டார். இறந்து போன சகாயம் மீனவர் சங்க உறுப்பினர் அல்ல. வருமானம் ஈட்டிய சகாயம் இறந்துவிட்டதால் அவரது குடும்பம் தற்போது வறுமையில் வாடுகிறது. எனவே அவரது குடும்பத்துக்கு முதல்–அமைச்சரின் நிவாரண நிதி கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சகாயத்தின் மனைவி விஜிமா என்பவரும் தனியாக மனு அளித்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் அளித்த மனுவில், “மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிராம பஞ்சாயத்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தினமும் வேலை மற்றும் கூலி சரியாக கொடுப்பதில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 300 நாட்களாக விரிவுபடுத்த வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குமரி மாவட்டத்தில் பழுதடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மர்களால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் உயிர் பலி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே பழுதாகி காணப்படும் டிரான்ஸ்பார்மர்களை உடனே மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story