பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் பழ.நெடுமாறன் பேட்டி


பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் பழ.நெடுமாறன் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2019 4:30 AM IST (Updated: 1 Jan 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என பழ.நெடுமாறன் கூறினார்.

கொரடாச்சேரி,


கொரடாச்சேரியில் நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி ‘‘இயற்கை வள பாதுகாப்பு, தமிழ் மக்களின் பங்கு’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் நம்மாழ்வார் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நம்மாழ்வார் செய்த தொண்டு காரணமாக பெருமளவில் மண்ணை காக்க வேண்டும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உழவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கு நம்மாழ்வாரின் உழைப்பு தான் காரணம்.


பிளாஸ்டிக் பொருட்களால் மண் மாசுபட்டுள்ளது, உணவு பொருட்கள் மாசடைந்துள்ளது. இந்த பிளாஸ்டிக்பொருட்களை உண்ணும் கால்நடைகள் உயிர் இழந்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் பேரழிவை நோக்கி செல்கிறோம். மனித குலமே அழிந்து விடும் நிலை உள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிப்பது மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கும் தடைவிதிக்க வேண்டும். இதனால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு வேறு பணிகளுக்கான வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழர் தேசிய முன்னணி துணைத்தலைவர் அய்யநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்புக்குழு பாரதிசெல்வன், தமிழாசிரியர் தமிழமுதன், கொரடாச்சேரி தமிழாசிரியர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் தண்ணீர் இயக்கம் அமைப்பின் செயலாளர் கண்மணி நன்றி கூறினார்.

Next Story