பா.ஜனதா ரூ.30 கோடி குதிரை பேர விவகாரம்: சித்தராமையா-சதானந்தகவுடா டுவிட்டரில் மோதல்


பா.ஜனதா ரூ.30 கோடி குதிரை பேர விவகாரம்: சித்தராமையா-சதானந்தகவுடா டுவிட்டரில் மோதல்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:40 AM IST (Updated: 1 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ரூ.30 கோடி குதிரை பேர விவகாரத்தில் டுவிட்டரில் சித்தராமையா, சதானந்தகவுடா இடையே மோதல் ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.30 கோடி வழங்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய மந்திரி சதானந்தகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

குதிரையில் ஏற முடியாதவன் சூரனும் இல்லை, தீரனும் இல்லை. காங்கிரஸ் கட்சி தனது குறையை மூடிமறைக்க பா.ஜனதா மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கிறது. ஆட்சியை நடத்த முதல்-மந்திரிக்கு ஒத்துழைப்பு தாருங்கள். கன்னடர்கள் அறிவாளிகள். உங்களின் பேச்சை நம்ப அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள சித்தராமையா, “சதானந்தகவுடா அவர்களே, உங்களின் அனுபவத்தை சரியாக கூறி இருக்கிறீர்கள். குதிரை ஏற முடியாதவன் சூரனும் அல்ல, தீரனும் அல்ல. எவ்வளவு என்றாலும், 11 மாதங்களிலேயே முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறங்கி ஓடி போனவர் அல்லவா நீங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு டுவிட்டரில் சித்தராமையா-சதானந்தகவுடா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் அவரவர் தலைவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். இதனால் நேற்று டுவிட்டரில் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story