வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்
வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர் சங்க 2–வது மாவட்ட மாநாடு நேற்று குமார் நகர் கருப்பராயன் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநாட்டை ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சுப்பராயன் தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சுரேஷ், பொதுச்செயலாளராக சசிகுமார், பொருளாளராக கடவுள், துணைத்தலைவர்களாக சேகர், மகேந்திரகுமார், துணை செயலாளர்களாக சிவசுப்பிரமணி, சக்திவேல் மற்றும் 25 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன பாதுகாப்பு மசோதாவை கண்டித்து வருகிற 8, 9–ந் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும். ஓட்டுனர் பேஜ் உரிமம் பெற 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும்.
காவல்துறையினர் சரக்கு வாகனங்களை சோதனை என்ற பெயரில் மறித்து ஓட்டுனர்களை தரக்குறைவாக பேசுவது தொடர்ந்து வருகிறது. இதனால் சரக்கு வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பாதிப்பு ஆளாகியுள்ளனர். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். 20 இருக்கை கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு ‘சீட் பெர்மிட்’ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.