குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராமங்கள் தோறும் போலீசாரை நியமித்து தீவிர கண்காணிப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராமங்கள் தோறும் ஒரு போலீசாரை நியமித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அதுபற்றி காவல்துறைக்கு உடனடியாக தகவல் கிடைக்கும் வகையிலும் ‘அவுட்ரீச்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களின் தொலைபேசி எண்கள், தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். கிராமத்தில் ஏதேனும் முக்கிய குற்ற நிகழ்வுகள் நடைபெற்றாலோ, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட ‘அவுட்ரீச்’ போலீசாருக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலமாக காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே தொடர்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதானவர்கள், தனியாக குடியிருக்கும் வீடுகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடன் விவரங்களை ‘அவுட்ரீச்’ போலீசார் பட்டியல் தயாரித்துள்ளனர். வயதானவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. இந்த இரு திட்டமும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறியதாவது:–
‘அவுட்ரீச்’ திட்டம் மூலமாக கிராமங்களில் ஏதேனும் சிறிய குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்து விடுகிறது. இவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே தகவல் கிடைத்த உடன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தும்போது, பெரிய அளவில் குற்றம் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடிகிறது. அதுபோல் போலீசார் கிராமங்கள்தோறும் சென்று வருவதால் கொள்ளையர்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது. அதுபோல் ‘ஹலோ சீனியர் சிட்டிசன்’ என்ற திட்டத்தின் மூலமாக கிராமங்களில் உள்ள வயதானவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு போலீசார் சென்று அவர்களிடம் உள்ள பட்டா புத்தகத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்கள். அதை அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். இதன் மூலமாக முதியவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர காவலன் செயலி குறித்து அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காவலன் செயலியை அவர்களின் ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளோம். ஆபத்தான காலத்தில் காவலன் செயலியை அழுத்தினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் சென்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக உள்ளது.
மேலும் காவலர்களின் மன அழுத்தத்தையும், இறுக்கத்தையும் குறைக்கும் வகையில் அரசால் காவலர் நிறைவாழ்வு பயிற்சி வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்படுகிறது. போலீசாரின் குடும்பத்தினருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போலீசாரும், போலீசாரின் குடும்பத்தினரும் நல்லமாற்றத்தை பெற்று இருக்கிறார்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையில் போலீசாருக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் குடும்பத்தினரும் அவருடைய வேலையின் தன்மை அறிந்து செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.