திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2019 12:00 AM GMT (Updated: 2019-01-02T00:46:33+05:30)

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:–

திருவாரூரில் 28–ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அதற்கான வியூகத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வகுத்துள்ளார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நான் நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். முதல் இரண்டு நாட்கள் புயலால் பாதிப்பு அடைந்த மக்கள் ஆத்திரத்தில் இருந்தார்கள். ஆனால் அதன் பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிவாரண நடவடிக்கையாலும், அமைச்சர்கள் முகாமிட்டு நேரடியாக நிவாரண பணிகளை கண்காணித்ததாலும் பொதுமக்கள் ஆறுதல் அடைந்ததோடு, தமிழக அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கொண்டாட்டம்

மேலும் புத்தாண்டை தொகுதி மக்களோடு கேக் வெட்டி அமைச்சர் கொண்டாடினார். இதில் ராதாகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து திருத்தங்கல் அதன் சுற்றுப்பகுதிகளான ஆலாவூரணி முக்கு, கலைமகள் பள்ளி முன்புறம் பெரியார் காலனி, ஆலமரத்துப்பட்டி ரோடு, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.42 லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. மின் கோபுர விளக்குகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இயக்கி வைத்தார். ராதாகிருஷ்ணன் எம்.பி., அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால்பாண்டி, வார்டு செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர் பாசறை செல்வம், அழகர், கூட்டுறவு சங்க தலைவர் ரமணா, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story