புத்தாண்டு இரவில் குடிபோதையில் தகராறு: தந்தை அடித்துக்கொலை; வாலிபர் கைது
நொளம்பூரில் குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர்,
சென்னை நொளம்பூர் வீட்டுவசதி வாரியம் 2–வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கண்ணகி(45). இவரது மூத்த மகன் நவீன்குமார்(19). பூந்தமல்லி அருகில் பருத்திப்பட்டு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகன் யுவனேஸ், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நவீன்குமார், நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கண்ணகி ‘‘ஏன் குடித்துவிட்டு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்?’’ என்று மகன் நவீன்குமாரிடம் கேட்டார்.
ஏற்கனவே குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேஷ், இவர்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்து ஏன் குடிக்கிறாய்? என மகனை கண்டித்துள்ளார் அப்போது மகனுக்கும், அப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் தந்தை என்றும் பாராமல் வெங்கடேசை அடித்து கீழே தள்ளினார். இதில் வெங்கடேஷ் தலையில் பின்பகுதியில் பலத்த அடிபட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வெங்கடேஷ் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்பு அவரது உடலை தனது சொந்த கிராமமான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், ‘‘இறப்பு சான்றிதழ் இல்லாமல் உடலை எடுத்து செல்ல முடியாது’’ என்று கூறினார். இதையடுத்து வெங்கடேசின் மனைவி மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று இறப்பு சான்றிதழை கேட்டுள்ளார்கள்.
அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் ‘‘ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே வெங்கடேஷ் இறந்து விட்டார். எனவே நாங்கள் இறப்பு சான்றிதழ் வழங்க முடியாது. நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கண்ணகி நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போதுதான் நவீன்குமார் குடிபோதையில் தந்தையை அடித்து கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து நவீன்குமாரை நொளம்பூர் போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.