திருவேற்காடு அருகே அடுத்தடுத்து 2 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்


திருவேற்காடு அருகே அடுத்தடுத்து 2 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 9:04 PM GMT)

திருவேற்காடு அருகே அடுத்தடுத்து 2 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம், கருமாரியம்மன் நகரில் சத்யராஜ் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் கூடைகள், தக்காளி பெட்டிகள், பிரிஜ், வாஷிங்மெஷின் போன்றவை வைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்டாண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் 15–க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மானேஜர் மோகன் (வயது 45), என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் கீழ் தளத்திலிருந்து புகை வந்தது. இதைப்பார்த்த அவர் மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு பணியிலிருந்த தொழிலாளர்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தீ மளமளவென தொழிற்சாலையின் பிற பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மற்றொரு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் தீ பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, விருகம்பாக்கம், கோயம்பேடு, கே.கே. நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 50–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தண்ணீர் மற்றும் ரசாயனக் கலவை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் ஏற்பட்ட கரும்புகை நீண்ட தூரத்துக்கு பரவியதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

2 தொழிற்சாலைகளிலும் சேர்த்து உற்பத்தி எந்திரங்கள், மூலப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story