பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்ததையொட்டி இறைச்சி கடைகளுக்கு பாத்திரம் எடுத்து சென்ற மக்கள்


பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்ததையொட்டி இறைச்சி கடைகளுக்கு பாத்திரம் எடுத்து சென்ற மக்கள்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 9:05 PM GMT)

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்ததையொட்டி கரூரில் இறைச்சி கடைகளில் பாத்திரத்தை எடுத்து கொண்டு வந்து பொதுமக்கள் இறைச்சி வாங்கி சென்றதை காண முடிந்தது. மேலும் துணிப்பை, பாக்கு மரத்தட்டுகள் விற்பனை கடைகளில் படுஜோராக நடந்தது.

கரூர், 

தமிழகத்தில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் குப்பை கழிவுகள் அதிகரிப்பதோடு, அவை சுற்றுச்சூழலுக்கு மாசுஏற்படுத்தும் விதமாக அமைவதால் ஜனவரி 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் டீகப், பாலித்தீன் பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த வகையில் கரூரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று அமலுக்கு வந்தது. மேலும் புத்தாண்டையொட்டி கரூர் செங்குந்தபுரம் 80 அடிரோடு, கோவை ரோடு, ஜவகர்பஜார், வாங்கல் ரோடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் பாத்திரத்தை எடுத்து கொண்டு இறைச்சி வாங்கி சென்றதை காண முடிந்தது.

மேலும் பாத்திரம் எடுத்து வராதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக காய்ந்த வாழை மட்டை, பாக்கு மட்டைகளில் இறைச்சியை மடித்து கொடுத்து கடைக்காரர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். மேலும் எந்த பொருள் வாங்க கடைக்கு சென்றாலும் பாலித்தீன்பை உள்ளிட்டவற்றை தேடாமல், துணிப்பை, பாத்திரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துங்கள் என இறைச்சிக்கடைகாரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில கடைக்காரர்கள், “இறைச்சி வாங்க பாத்திரம் கொண்டு வரவும்” என சிலேட்டில் எழுதி கடைமுன் தகவலுக்காக வைத்திருந்தனர். எனினும் சில இறைச்சி கடைகளில் வழக்கம் போல் பாலித்தீன் பைகளில் வைத்து கொடுத்து, இறைச்சி விற்பனை நடந்தது.

மேலும் கரூர் பஸ் நிலையம் அருகே முருகநாதபுரம், ஜவகர்பஜார், திருமாநிலையூர், லைட்ஹவுஸ்கார்னர், திண்ணப்பா கார்னர் உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பரவலான மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் “இங்கு பாலித்தீன் பயன்பாடு இல்லை... எனவே மக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நெகழியை எதிர்பார்க்காதீர்...” என எழுதி ஒட்டுவில்லை வைத்திருந்தனர். இதனால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வீடுகளில் இருந்து சாக்குபை, துணிப்பை கொண்டு வந்து மக்கள் வாங்கினர். அதனை எடுத்து வராதவர்களுக்கு கட்டைபை, துணிப்பையை கடைக்காரர்கள் வழங்கி அதற்கும் சேர்த்து தொகை வசூலித்தனர். மேலும் மளிகை கடைகள் உள்ளிட்டவற்றில் பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் உள்ளிட்டவை விற்பனையும் படுஜோராக நடந்தது. எனினும் அதிகாரிகள் வந்தால் பார்த்து கொள்ளலாம்... என எண்ணி சில கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரத்தில் பயன்படுத்தினர்.

கரூரில் உள்ள டீக்கடைகளில் முன்னதாக மொத்தமாக வாங்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் அதிகளவில் இருப்பதால் அதனை காலி செய்யும் பொருட்டு, அந்த கப்புகளில் டீ வழங்கியதை காண முடிந்தது. மேலும் சூடான டீ, காபியை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றினால் அதில் உள்ள மெழுகு உருகி உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே விரைவில் பிளாஸ்டிக் டீ கப் பயன்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என டீக்கடைகளில் இளைஞர்கள் சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. எனினும் பரவலாக கரூர் டீ கடைகளில் கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்தப்படுவதாலும், ஓட்டல்களில் வாழை இலை, பாக்கு மரத்தட்டு பயன்படுத்தப்படுவதாலும் மக்களிடையே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

கரூரில் உள்ள டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக கண்ணாடி டம்ளர்கள், வாழை இலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறு மதுபான பிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் மதுகுடிக்க அதிகம் செலவாகிறதே... என கூறி சிலர் புலம்பி சென்றதையும் காண முடிந்தது. மேலும் மொத்தமாக மது அருந்த பாருக்கு வருபவர்கள் தண்ணீர் கேன் உள்ளிட்டவற்றை தயாராக எடுத்து வந்தனர். சிலர் வெளியிடங்களில் விற்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து மறைமுகமாக அதனை பயன்படுத்தி மது குடித்து விட்டு சென்றனர். அரசு சட்டத்தின் மூலம் அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் மட்டும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியாது. மக்கள், வணிகர்கள் ஒருங்கிணைந்து ஒரு முறை தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை தவிர்த்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Next Story