நாகர்கோவிலில் நள்ளிரவில் இளைஞர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


நாகர்கோவிலில் நள்ளிரவில் இளைஞர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T03:02:42+05:30)

நாகர்கோவிலில் நள்ளிரவில் இளைஞர்களுடன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புத்தாண்டு கொண்டாடினார். ‘கேக்’ கொடுத்து சாலை விதியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவில் ஏராளமான இளைஞர்கள் சாலைகளில் வலம் வந்தபடி புத்தாண்டு வாழ்த்துகளை கூறினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய 4 சப்-டிவிஷன்களிலும் போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

நாகர்கோவில் வடசேரியில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் பிடித்தனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், பிடிபட்ட இளைஞர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதன் பிறகு அனைவர் மத்தியிலும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். போலீசில் பிடிபட்டதும் அச்சத்துடன் இருந்த இளைஞர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீசார் கேக் கொடுத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

இதனையடுத்து அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அறிவுரை கூறினார். அதாவது மோட்டார் சைக்கிள்களில் வேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும், ஹெல்மெட் உபயோகிப்பதின் அவசியம் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் சாலை விதிமுறையை கடைபிடிப்பது தொடர்பாகவும், சட்ட ஒழுங்கு குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர் பிடிபட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர். புத்தாண்டு பிறப்பு என்பதால் அனைவரையும் விடுவதாகவும், இனியும் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்று பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதே போல குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்கள். 

Next Story