தேனி நகரில், புத்தாண்டு தினத்திலும் தவிக்க வைத்த ஏ.டி.எம். மையங்கள்
தேனி நகரில் புத்தாண்டு தினத்திலும் ஏ.டி.எம். மையங்கள் பொதுமக்களை பரிதவிக்க வைத்தது.
தேனி,
தேனி நகரில் பல மாதங்களாகவே வங்கி ஏ.டி.எம். மையங்கள் சரிவர செயல்படுவது இல்லை. அடிக்கடி பழுதாவதும், பணம் தீர்ந்து போனால் மீண்டும் பணம் நிரப்பாமல் காலம் கடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் ஏ.டி.எம். மையங்கள் சீரான சேவை வழங்குவது இல்லை. மையங்களில் காட்சிப் பொருளாக ஏ.டி.எம். எந்திரங்கள் இருப்பதே பல நாட்களில் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று புத்தாண்டு பிறந்தது. அதையொட்டி சுற்றுலா இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தேனி நகரை கடந்து சுருளி அருவி, மேகமலை, மூணாறு, தேக்கடி, குமுளி போன்ற சுற்றுலா இடங்களுக்கு ஏராளமான வாகனங்களில் மக்கள் சென்றனர்.
அதேநேரத்தில் தேனி நகரில் நேற்று பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பரிதவித்தனர். தனியார் வங்கிகளை விட தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் தான் அதிகம் பரிதவிக்க வைத்தது.
அதேபோல், பணம் செலுத்தும் எந்திரங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியாமல் பரிதவித்தனர். வழக்கமாக விடுமுறை நாட்களில் பொதுமக்களை பரிதவிக்க வைக்கும் ஏ.டி.எம். மையங்கள் புத்தாண்டு தினமான நேற்றும் விட்டு வைக்கவில்லை. எனவே மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். விடுமுறை நாட்களிலும் தடையின்றி வங்கி ஏ.டி.எம். எந்திரங்கள், பணம் செலுத்தும் எந்திரங்கள் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.
Related Tags :
Next Story