நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்,


நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி, திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஆற்றில் மழைநீர் செல்லும்போது தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவு நீரை ஆற்று நீருடன் கலந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீருடன் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீருடன் சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால் கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து குறைந்த அளவு தண்ணீர் வருவதால், நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் வருவதால், இதன் மூலம் பாசனம் செய்யும் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.


அதே போல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள குடிநீரும், சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. காவிரி ஆற்றில் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குளித்து வரும்பொழுது உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது. நொய்யல் ஆற்று தண்ணீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 68 அலகு என இருந்தது.

தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு, நீருடன் வரும் தண்ணீரை பரிசோதனை செய்தபோது உப்பின்தன்மை சுமார் 900 அலகு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டுமென நொய்யல் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story