ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தஞ்சை போலீஸ் நிலையத்தில், நர்சு திடீர் தர்ணா


ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தஞ்சை போலீஸ் நிலையத்தில், நர்சு திடீர் தர்ணா
x
தினத்தந்தி 3 Jan 2019 4:30 AM IST (Updated: 2 Jan 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தஞ்சை போலீஸ் நிலையத்தில் நர்சு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகள் பிரபா(வயது 35). இவர் நேற்று தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார். அவரை உடனடியாக கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என கூறினார்.


இது குறித்து பிரபா கூறுகையில், ‘‘எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நான் குவைத்தில் நர்சாக பணியாற்றி வருகிறேன். அங்கு பணி செய்தபோது, அங்கு பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவர் என்னிடம், தஞ்சையில் தொழில் செய்யலாம் என்றும் அதற்கு நிதி உதவி செய்யுமாறும் கூறினார். நான் அவரை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன்.

தற்போது அவர் உன்னுடன் வாழ முடியாது என்று கூறியதோடு, வேறு பெண்ணை திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறினார். நான் கொடுத்த பணத்தை கேட்டபோது என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் நவம்பர் மாதம் 25–ந் தேதி புகார் செய்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்தால் தான் நான் இங்கிருந்து கலைந்து செல்வேன்’’என்றார்.


இதையடுத்து பிரபாவை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story