புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் பக்கிரிசாமி, கண்ணன், தமிழ்ச்செல்வி, வாசு, செந்தில்குமார், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி கலந்து கொண்டு பேசினார்.


போராட்டத்தில், கஜா புயலால் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், நெல், கரும்பு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள், மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் நிதி நிறுவனம், வங்கிகளில் மகளிர் குழுவினர் பெற்ற கடனையும், விவசாயிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்து குடிசையில்லாத மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி சம்பளத்தை ரூ.400 ஆக வழங்க வேண்டும். முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். இருந்தாலும் சிலர், கதவு மீது ஏறி அலுவலக வளாகத்திற்குள் குதித்தனர். மற்றவர்களும் ஏற முயற்சி செய்ததால் கதவை போலீசார் திறந்து விட்டனர். இதனால் அலுவலகத்திற்கு வெளியே நின்ற விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கத்தினர் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று அலுவலக வாசலில் அமர்ந்தனர். இவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டன.

இந்த நிலையில் கலெக்டர் அண்ணாதுரை அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கதவுகள் திறக்கப்பட்டு அவர், நிர்வாகிகள் பலரை அழைத்து பேசினார். அப்போது உங்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாலை 6 மணிக்கு காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Next Story