தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-01-02T23:18:06+05:30)

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,


பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், பாலிதீன் பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் காளிமுத்து மேற்பார்வையில் நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் 60–க்கும் மேற்பட்டவர்கள் 2 குழுவாக பிரிந்து தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


ஒரு குழுவினர் பழைய பஸ் நிலையம், காந்திஜிசாலை பகுதிகளிலும், இன்னொரு குழுவினர் புதிய பஸ் நிலையம் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். துணிக்கடை, தேநீர்கடை, ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட அனைத்துக்கடைகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு சில கடைகளில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகராட்சி பகுதியில் மொத்தம் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இது குறித்து மாநகராட்சி ஆணையர் காளிமுத்து கூறுகையில், ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என 2 குழுக்கள் அமைத்து தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை மாநகராட்சி துப்புரவு ஊழியரிடம் ஒப்படையுங்கள். நாங்கள் சோதனை செய்து கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும்’’என்றார்.

Next Story