ஒட்டன்சத்திரம் அருகே, மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டுயானை - வாகன ஓட்டிகள் அச்சம்
ஒட்டன்சத்திரம் அருகே, மலைப்பாதையில் சுற்றித் திரியும் காட்டுயானையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் வனப்பகுதி 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு யானை, கடமான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு, தண்ணீருக்காக அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதோடு, விளைபயிர்களையும், மரங்களையும் நாசப்படுத்திவிட்டு சென்றுவிடுகின்றன.
குறிப்பாக யானைகள் தான் அதிக அளவில் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது குறித்து தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவார்கள்.
ஆனால் சமீபகாலமாக ஒரு ஆண் யானை பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, புலிக்குத்திக்காடு பகுதிகளில் வலம் வர தொடங்கியுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இந்த யானை மலைப்பாதையில் வந்து நின்றுகொண்டு, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சப்படுத்துகிறது. காட்டுயானை மலைப்பாதையில் நிற்பதால் பொதுமக்களும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அச்சத்தில் முடங்கி கிடக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் வந்து அதனை விரட்டினாலும் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வந்து மலைப்பாதையில் நின்றுவிடுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதோடு, அது மீண்டும் வெளியே வராமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story