அமெரிக்க வாலிபரை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 3 பேரிடம் போலீஸ் விசாரணை மேலும் ஒருவர் இன்று ஆஜராகிறார்
தூத்துக்குடியில் அமெரிக்க வாலிபரை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஒருவர் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்த மார்க் சியல்லா(வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார். அவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசார் அமெரிக்க வாலிபர் மார்க் சியல்லாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அவருடைய விசா ரத்து செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அதே நேரத்தில் அமெரிக்க வாலிபர் சந்தித்து பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி அவர்கள் 4 பேரும் நேற்று தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் ஆஜரானார்கள். அவர்களில் ரீகன் தவிர மற்ற 3 பேரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது சுற்றுலா விசாவில் வந்த அமெரிக்க வாலிபரை சுற்றுலா தலம் அல்லாத இடத்துக்கு அழைத்து சென்றது ஏன், அவர் யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. இதில் பாத்திமா பாபு, ராஜா, பிரின்ஸ் ஆகிய 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிந்தது.
விசாரணையில், பத்திரிகையாளர் என்ற முறையில் அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா தங்களை சந்தித்ததாகவும், அவரிடம் போராட்டம் குறித்து விளக்கி கூறினோம்’ என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. காலதாமதம் ஆனதால், ரீகனிடம் நேற்று விசாரணை நடத்தப்படவில்லை. அவரை இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வருமாறு போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story