சபரிமலையில் பெண்களை அனுமதித்த விவகாரம், கேரள அரசை கண்டித்து கூடலூரில் கடைகள் அடைப்பு
சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து கூடலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
கூடலூர்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை கோவிலின் பாரம்பரியம் மற்றும் புனிதத்தை பாதுகாக்க கோரி கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஆதரவாக பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டியது. ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால், சபரிமலை சன்னிதானத்துக்குள் பெண்கள் நுழைய முடியவில்லை.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்தனர். இதை அறிந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் ஆவேசம் அடைந்தனர். இதனால் கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா, கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. அரசு பஸ்கள், வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதனால் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட இடங்களுக்கு தமிழக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் கேரள அரசு பஸ்களும் கூடலூருக்கு வரவில்லை. இதனிடையே சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கூடலூர் நகராட்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கேரளாவில் நடந்த சம்பவத்துக்கு கூடலூரில் ஏன் கடைகளை அடைக்கக்கூடாது, எனவே அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கடை வியாபாரிகளை வற்புறுத்தினர். இதை கண்ட பா.ஜனதாவினர் கடைகளை திறக்கக்கூடாது என்று கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதாபன், செயலாளர் அமர்கான், ரசாக் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைகளை திறந்தால் பாதுகாப்பு அளிக்க தயார். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் கூடலூர் நகரில் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்பட்டது.
இதனிடையே சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய தலைவர் தினேஷ்குமார், நகர பொதுச்செயலாளர் சிவச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணதாஸ், ஆட்டோ ஓட்டுனர் முன்னணி நிர்வாகி யுவராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஊட்டி ஏ.டி.சி. திடலில் கேரள அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். இதில் சபரிமலையை காப்போம், சாமியே சரணம் அய்யப்பா என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பா.ஜனதா மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் சரண கோஷ ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் கூடலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story