தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்


தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 3 Jan 2019 11:15 PM GMT (Updated: 3 Jan 2019 5:22 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

சேதுபாவாசத்திரம்,


தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சங்கர் (வயது45). தி.மு.க.வை சேர்ந்த இவர் பள்ளத்தூர் பகுதியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவார். இவருக்கும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்துப்பிரச்சினை இருந்து வந்தது.

இதுதொடர்பான வழக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக கோபால்சங்கர் நேற்று பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்றார்.


பின்னர் அவர் பட்டுக்கோட்டையில் இருந்து பள்ளத்தூர் வழியாக ஆண்டிக்காட்டில் உள்ள வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென மோட்டார்சைக்கிளை வழிமறித்தது. இதனால் கோபால்சங்கர் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி வந்த 4–க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய மர்ம கும்பல், கோபால்சங்கரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.


இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கோபால்சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த கோபால்சங்கருக்கு ஜான்தேவி(32) என்ற மனைவியும், நிவேதா(10), ஹரினி(4) என்ற 2 மகள்களும் உள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபால்சங்கரை வெட்டிக்கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சொத்துப்பிரச்சினையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story