இடைத்தேர்தல் அமைதியாக நடக்க ஆளும் கட்சியினர், அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது கலெக்டர் வலியுறுத்தல்


இடைத்தேர்தல் அமைதியாக நடக்க ஆளும் கட்சியினர், அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தல் அமைதியாக நடக்க ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் இடைத்தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்டுள்ள நடத்தை விதிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் தொடர்பான பொது நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் சாதி, இனம், மதம், மொழி குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. தனிப்பட்ட நபர்கள் குறித்த விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றமாகும். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் பிரசாரம் செய்யக்கூடாது. வாக்குப்பதிவு முடிவடைய நிர்ணயம் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது.

அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்தும், அமைக்க இருக்கும் ஒலி பெருக்கிகள் குறித்தும் போலீசாரிடம் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். பொதுமக்களுக்கு இடையூறாக ஊர்வலங்களை நடத்தக்கூடாது.

அதிகாரத்தில் உள்ள கட்சி, எந்த சூழ்நிலையிலும் தேர்தல் நடைமுறைகளில் தனது அலுவலக அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது.

தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று, அதற்கான ஆணையை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் எந்த வகையான விளம்பரமும் செய்யக்கூடாது.

ஊராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெற்று உரிய அலுவலர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவாரூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முருகதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி இருதயராஜ், மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, தனி தாசில்தார்(தேர்தல்) சொக்கநாதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story