சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவகாரம்: நாகர்கோவிலில் 25 இடங்களில் பா.ஜனதா போராட்டம்


சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவகாரம்: நாகர்கோவிலில் 25 இடங்களில் பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தை தொடர்ந்து நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பக்தர்களும், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டருமான பிந்து (வயது 42), மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் கனகதுர்கா (44) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் வன்முறை வெடித்தது. நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தால் கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, கிருஷ்ணன்கோவில், வடசேரி சந்திப்பு, நாகராஜா கோவில் திடல், மீனாட்சிபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பா.ஜனதா கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள அரசுக்கு எதிராகவும், முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பினராயி விஜயனின் உருவபொம்மை, உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் நடந்த போராட்டத்தின் போது அண்ணா பஸ் நிலைய சுரங்கப்பாதை பகுதியில் இருந்து திடீரென பா.ஜனதா கட்சியினர், பினராயி விஜயனின் உருவ பொம்மையை பாடைகட்டி தூக்கி வந்தனர். அந்த பாடைக்கு வழிநெடுக மலர்களை தூவினர். பின்னர் அண்ணா பஸ் நிலையத்துக்கும், வேப்பமூடு காமராஜர் சிலை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பாடையை இறக்கி வைத்து, பினராயி விஜயனின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து விரைந்து வந்த போலீசார் தீயிட்டு கொளுத்தப்பட்ட உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த போராட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் நாகர்கோவில் கோட்டாரில் கார்-வேன் தொழிலாளர்கள் யூனியன் (சி.ஐ.டி.யு.) சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

இதேபோல் சுசீந்திரம் அருகே வைராவிளை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடிக்கம்பத்தையும், ஈத்தாமொழி அருகே செம்பொன்கரை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடிக்கம்பம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடிக்கம்பத்தையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கோட்டார், சுசீந்திரம், ஈத்தாமொழி ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.

நேற்று அதிகாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஆரல்வாய்மொழி அருகே நால்கால்மடம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோல் நாகர்கோவில் கோர்ட்டு முன்பு பா.ஜனதா வக்கீல்கள் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜனதா கட்சியினரின் இந்த போராட்டம் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் மக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், கடைவீதிகள் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story