கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திராட்சைக்கு மாற்றாக ‘பேஷன் புரூட்’ சாகுபடி


கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திராட்சைக்கு மாற்றாக ‘பேஷன் புரூட்’ சாகுபடி
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திராட்சைக்கு மாற்றாக ‘பேஷன் புரூட்’ பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடலூர், கம்பம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அனுமந்தன்பட்டி, தென்பழனி, மூர்த்திநாயக்கன்பட்டி, சுருளிப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் திராட்சை பழங்கள் சாகுபடி நடக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஆண்டு முழுவதும் இங்கு திராட்சை பழங்கள் விளைச்சல் அடைகிறது. ஆண்டின் அனைத்து நாட்களிலும் பழங்கள் கிடைக்கும்.

அதே நேரத்தில் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பது இல்லை. எல்லா சீசன்களிலும் உற்பத்தி செலவில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத போதிலும், விலையில் கடும் வீழ்ச்சியை சந்திப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே திராட்சை கொடிகளை அகற்றிவிட்டு மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீப காலமாக ‘பேஷன் புரூட்’ எனப்படும் மருத்துவ குணமிக்க பழங்கள் சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் திராட்சை கொடிகளை அகற்றிவிட்டு ‘பேஷன் புரூட்’ நாற்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடப்பட்ட நாற்றுகள் கொடியாக படர்ந்து, தற்போது காய்த்து தொங்குகின்றன.

பார்க்கும் போதே ருசிக்கத் தூண்டும் வகையில் இந்த பழங்கள் உள்ளன. புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பழங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் பழமாக இது உள்ளது.

இதுகுறித்து சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்.காட்சிக்கண்ணன் கூறுகையில், ‘நான் பல ஆண்டுகளாக திராட்சை சாகுபடி செய்து வந்தேன். தற்போது அதில் ஒரு பகுதியில் திராட்சை கொடிகளை அகற்றிவிட்டு பேஷன் புரூட் சாகுபடி செய்துள்ளேன். தற்போது நல்ல விளைச்சல் அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. திராட்சையை ஒப்பிடும் போது சாகுபடி செலவு குறைவு. திராட்சைக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் தற்போது இந்த பழங்கள் சாகுபடிக்கு மாறி உள்ளனர்’ என்றார்.

Next Story