பெரம்பலூர் அருகே பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெரம்பலூர் அருகே பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:45 AM IST (Updated: 4 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே பீரோவை உடைத்து 30 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா(வயது 35). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. சுப்பிரமணியன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் விவசாய கூலி வேலைக்கு சென்று கவிதா குடும்பம் நடத்தி வருகிறார்.

2 குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டை பூட்டி விட்டு கவிதா வேலைக்கு சென்றார். வீட்டை பூட்டிய கவிதா சாவியை பள்ளி சென்று மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு தெரியும்படி வீட்டின் முன்புற சுவற்றில் வைத்து இருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிய கவிதா கதவுகள் திறந்து கிடந்ததால் குழந்தைகள் பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்று எண்ணத்தில் வீட்டின் உள்ளே நுழைந்தார். ஆனால் குழந்தைகள் இல்லை.

அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு கவிதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story