கேரள அரசை கண்டித்து இந்து முன்னணி, பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் கேரள அரசை கண்டித்து இந்து முன்னணி, பா.ஜனதா சார்பில் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்,
சபரிமலையின் புனிதம் காக்கவும், கேரள கம்யூனிஸ்டு அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும் திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது, அய்யப்பனை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள். கம்யூனிஸ்டு ஆட்சி கேரளாவில் மட்டும் இருக்கிறது. இனி கேரளாவில் மட்டுமல்ல எங்கும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.
மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு.வெங்கடேஷ்வரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சேவுகன், மாவட்ட தலைவர் அண்ணாத்துரை, கோட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்களை திட்டமிட்டு சாமி தரிசனம் செய்ய வைத்த கம்யூனிஸ்டு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சரண கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுபோல் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை நடைபெற்றது. சபரிமலையின் புனிதம் காக்கவும், கேரள கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் சரோஜினி, கோட்ட பொறுப்பாளர் வைரவேல், இளைஞர் அணி மாநில செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ், மகளிரணி பொதுச்செயலாளர் ராதாமணி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story