மனைவியை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி.
சின்னமணி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்கிக்கொண்டு இருந்த பூங்கொடியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி சின்னமணி கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமணியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சின்னமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சின்னமணியை போலீசார் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story