இரட்டை அடுக்கு பஸ் பயணத்துடன் கோவை விழா தொடங்கியது


இரட்டை அடுக்கு பஸ் பயணத்துடன் கோவை விழா தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 7:59 PM GMT)

இரட்டை அடுக்கு பஸ் பயணத்துடன் கோவை விழா நேற்று தொடங்கியது.

கோவை,

யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 11-வது ஆண்டாக நடைபெறும் கோவை விழாவின் தொடக்க நிகழ்ச்சி வ.உ.சி. பூங்காவில் நேற்று காலை நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியான இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் பயணத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜய கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் இரட்டை அடுக்கு பஸ்சை தொடங்கி வைத்தனர்.

தொடக்க விழாவில், கோவை விழாவின் நிறுவனர் சங்கர் வாணவராயர், தொழில் அதிபர் அன்பரசன், விஷ்ணு பிரபாகர் மற்றும் யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., கொடிசியா, கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மக்களுக்காக கோவை மக்களால் நடத்தப்படும் விழாவை 103 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து வருகிற 12-ந் தேதி வரை 126 நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அதில் சில நிகழ்ச்சிகள் கோயம்புத்தூர் விழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெவ்வேறு இடங்களில் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டு மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இரட்டை அடுக்கு டபுள் டக்கர் பஸ் பயணம் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பஸ்சில் இலவசமாக செல்ல வேண்டுமென்றால் கோவை விழா செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிக்க விரும்பும் நாளுக்கு முந்தைய நாள் மாலை 4 மணிக்கு மேல் தங்கள் இருக்கையை பதிவு செய்து கொள்ளலாம். மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்க முடியும்.

கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் கொடிசியாவில் நடைபெறுகிறது. கோவையில் உள்ள 33 கலாசார அமைப்புகள் இணைந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடத்துகின்றன. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் கோவை இசை திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. இது இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். பிரபலமான பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பாட உள்ளனர்.

கோவை விழாவில் முதல் முறையாக கோவை விமான நிலையத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விமானம் மூலம் கோவைக்கு வரும் மக்களுக்கு திருவிழா உணர்வு அங்கிருந்தே தொடங்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே திறந்தவெளியில் திரைப்பட திருவிழா வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும். சிறந்த திரைப்படங்கள் கொடிசியா ஆம்பி தியேட்டரில் திரையிடப்படும். வினாடி வினா போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது. சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த போட்டியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பழங்கால கார் பிரியர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்காக பாரம்பரிய கார் கண்காட்சி வருகிற 12-ந் தேதி சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மாலில் நடைபெறுகிறது. விளையாட்டு துறையில் கோவை வீரர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் கோவை தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

Next Story